Saturday, February 19, 2011

இதுவும் கடந்து போகும்

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் எழுந்து பல் துலக்குவதற்காக வாஷ்-பேசின் முன்னால் நின்று கொண்டிருக்கிறான். குடுவையில் வைத்திருந்த அவனுடைய பிரஷ் முழுவதும் ஈரமாக இருந்தது. அவன் இப்போது தான் எழுந்து வருகிறான். அப்படி என்றால் பிரஷ்ஷை வீட்டில் இருப்பவர்களில் யாரோ ஒருவர் தவறுதலாக பயன்படுத்தி இருக்க வேண்டும்! என்ன தான் வேறு வேறு நிறங்களில் வேறு வேறு மாடல்களில் அவற்றை வாங்கி வைத்தாலும் எப்போதாவது இந்த மாதிரி நடந்து விடுகிறது. யார் இதைச் செய்திருப்பார்கள்? இந்தக் கேள்வி உங்கள் மனதில் வந்தவுடன், ‘வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தான் இப்படி செய்வார்கள்’ என்ற பதிலும் வரக் கூடும்.

ஏன் என்றால், வயதானவர்களுக்கு மறதி அதிகம் அல்லது மறதி அவர்களுக்கு இயல்பானது என்று நாம் நம்புகிறோம்; அவர்களுடைய பார்வையின் சக்தி குறைவு என்று நினைக்கிறோம்; ஆனால் தூக்கக் கலக்கத்தில் வரும் நடுத்தர வயதினரோ அல்லது இளைய வயதினரோ கூட அந்தத் தவறைச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது! இரண்டு மூன்று சகோதரர்களுடன் நீங்கள் ஒரே வீட்டில் வசித்திருப்பீர்கள். அல்லது விடுதியில் தங்கி கல்லூரியில் படித்திருப்பீர்கள். அங்கே துவைத்துக் காயப் போட்டிருக்கும் பனியன்கள், ஒரே பிராண்டாகவும் ஒரே அளவாகவும் இருக்கும் போது, அவற்றில் இருந்து சரியாக உங்களுடைய பனியனைத் தேர்ந்தெடுத்து எல்லா நேரமும் இளைய வயதினராலேயே போட முடிவதில்லை என்பதையும் புரிந்திருப்பீர்கள். ஏதேதோ பேசிக் கொண்டு அரங்கத்தில் இருந்து வெளியில் வந்து வாகனங்களை நிறுத்தும் இடங்களில் தங்களுடைய வாகனம்தானா என்று பதிவு எண்ணைச் சரி பார்க்காமல், உத்தேசமாக அதே நிற அதே மாடல் வாகனத்தை திறக்க முயலும் மனிதர்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். “ என்னுடைய வண்டியில் நீங்க என்ன செய்யறீங்க?” என்று அந்த வண்டியின் சொந்தக்காரர் வந்து சொல்லும் வரை ‘லாக் ஜாம்’ ஆகியிருக்கு என்று தீவிரமாக அவர்கள் வண்டியைத் திறக்கவே முயன்று கொண்டிருப்பார்கள்!

இதெல்லாம் தனிமனிதர்கள் விவகாரம்; எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஏதேனும் தவறு நடந்தாலும் அதைச் சரி செய்து கொள்ளலாம். ஒரு நாடு அல்லது அந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அமைச்சர் இது போன்ற கவனக் குறைவுடன் ஒரு செயலை சர்வதேச அரங்கில் செய்யலாமா? அது அந்த நாட்டுக்கே தலைகுனிவு இல்லையா? இந்தக் கேள்விகளை எல்லாம் சென்ற வாரத்தில் அதிகமாகக் கேட்க முடிந்தது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அப்படி ஒரு வேலையைச் செய்துவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் போர்த்துக்கீசிய அமைச்சரின் பேச்சை எடுத்து வாசிக்கத் தொடங்கி விட்டார்! மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் பேசிய பிறகும் கூட அவர் அந்தத் தவறை உணரவில்லை. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி எழுந்து அமைச்சரின் தவறைச் சுட்டிக் காட்டிய பிறகே கிருஷ்ணா தன்னுடைய ’ஒரிஜினல்’ உரையை வாசிக்கத் தொடங்கி இருக்கிறார்!

இந்தியாவின் மானமே போய்விட்டது, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கோரி இந்தியா தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இவ்வளவு கவனக்குறைவாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நடந்து கொண்டிருப்பது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய தலைகுனிவு என்று பத்திரிகைகளிலும் சமூக வலைத் தளங்களிலும் விமர்சனங்கள் வெளியாகின. ஆனால் அதற்கு கிருஷ்ணா என்ன பதில் சொன்னார்? ‘தெரியாமல் நடந்துவிட்ட தவறு’ என்று வருத்தம் தெரிவித்தாரா? இல்லை. ’அது ஒன்றும் தவறில்லை’ என்று சாதாரணமாக சொல்லி இருக்கிறார். “என்னுடைய மேஜையில் ஏராளமான பேப்பர்கள் இருந்தன; அவற்றில் ஒன்றை எடுத்து வாசித்து விட்டேன்” என்று சலனமில்லாமல் பேசுகிறார். இந்தியக் கடல் எல்லையில் அந்நிய ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையே எந்தவித சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அந்த அமைச்சர், பேப்பர் மாறியதற்கு வருந்துவாரா என்ன?

அமைச்சரையாவது அகங்காரம் கொண்டவர் என்றும் அவ்வளவு எளிதாக தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்க மாட்டார் என்றும் மக்கள் சுலபமாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் வெளியுறவுத் துறை அதிகாரிகளும் அரசியல்வாதியான அமைச்சரின் பாட்டுக்கு ஏற்ற மாதிரி தாளம் போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக புதிய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். “அவையில் இருப்பவர்களை விளித்தும் மரியாதையுடன் அவர்களைக் குறிப்பிட்டும்தான் எல்லா உரைகளின் ஆரம்பப் பகுதிகளும் இருக்கும். வேறொரு நாட்டு அமைச்சரின் உரையில் இருந்து அந்தப் பகுதியை வாசித்துவிட்டு, பிறகு அமைச்சர் தன்னுடைய உரையை வாசித்தார்” என்று வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் சமாளிக்கிறார்கள்!

இணையப் புரட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் அதைப் பற்றி உடனே இணையத்திலேயே குடியிருக்கும் ‘ஆம் ஆத்மி’க்கள் உடனே கருத்து சொல்லி விடுவார்கள். சவுக்கால் அடிப்பதைப் போல் கூர்மையாக எழுதுகிறார்கள் என்று சொல்லப்படும் பத்திரிகைகள் அல்லது காட்சி ஊடகங்கள் எல்லாவற்றையும் விட ‘ட்விட்டர்’ போன்ற சமூக வலைத் தளங்களில் மக்கள் தெரிவிக்கும் கருத்து நெற்றிப் பொட்டில் அறைவது போல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்க்கலாம். “நம்முடைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை கிருஷ்ணா பெருமைப்படச் செய்து விட்டார். எழுதிக் கொடுக்கும் உரையை பிரதிபா இதுவரை தவறாகவோ மாற்றியோ படித்ததில்லை,” என்பது ஒருவர் கருத்து. இன்னொருவர், “போர்த்துக்கீசிய வெளியுறவு அமைச்சரின் உரையை எஸ்.எம்.கிருஷ்ணா முதல் ஐந்து நிமிடம் படித்தார். இதுவரை அவர் பேசிய பேச்சுக்களிலேயே மிகச் சிறந்த பேச்சு இதுதான்” என்று சொல்லி இருக்கிறார்!

எல்லாவிதங்களிலும் அமெரிக்காவை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற நவீன கொள்கையை கிருஷ்ணா கடைப்பிடித்தார் என்பதால் அவரைக் குற்றம் சொல்லக் கூடாது என்று நல்லவேளை நம்முடைய வெளியுறவுத் துறை சொல்லவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால், கடந்த வருடம் செப்டம்பர் 23-ம் தேதி ஐ.நா. சபையின் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசிய பேச்சை அவர்கள் முன்னுதாரணமாக காட்டியிருப்பார்கள். ” கொடுங்கோலர்களிடம் இருந்தும் வெளிநாட்டு அதிகாரத்திடம் இருந்தும் விடுதலை பெற்று இராக்கின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று வேறு ஒருவருக்காக ‘டெலி-ப்ராம்ப்டரில்’ இருந்த உரையை ஒபாமா வாசித்தார் என்பது அதன் பின்னணிச் செய்தி! இது போன்ற தவறுகளோ கவனக் குறைவுகளோ செய்வதற்கு வயது மட்டும் காரணம் இல்லை என்றே தோன்றுகிறது.

இறுதியாக ட்விட்டரில் வந்த இன்னொரு செய்தி. “உங்கள் தவறுகள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன. கிருஷ்ணா! தவறான விமானம் ஏறி வேறெங்கோ போய்விடாதீர்கள். சரியான விமானம் ஏறி டெல்லி வந்து சேருங்கள்!” அவர் இந்தியா வந்து சேர்ந்து விட்டார். அடுத்தமுறை சர்வதேச அரங்கில் அவர் பேசும்போது அவருடைய மேஜையில் அவருடைய உரையைத் தவிர வேறு உரைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. இப்படி எல்லாம் சொல்லவில்லை என்றால், மக்கள் பிரதிநிதியை மதிக்கத் தவறிய குற்றத்தை நாம் செய்தவர்களாகி விடுவோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

மிச்சமிருக்கும் நம்பிக்கை

“உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தாலும் சரி, பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தாலும் சரி, எந்தவிதமான வேறுபாடும் காட்டக் கூடாது; இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் விசாரித்து முடிப்பதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் அது கோரி இருக்கிறது. வேறு எந்த வழக்கோடும் இந்த வழக்கை ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. தகவல் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்த காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஊழல் குறித்த முதல் தகவல் அறிக்கையை வருகிற மார்ச் 31-க்குள் சி.பி.ஐ. என்ற மத்திய புலனாய்வு நிறுவனம் தாக்கல் செய்யும். கடந்த 2001 முதல் 2006 வரை நடந்த அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி விசாரித்து வருகிற மே 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ. அறிக்கை அளிக்கும்.

ஏதோ டெல்லியில் நடந்த ஊழல் என்று வழக்கை நினைத்துக் கொண்டிருந்த பலரும் கூட, இந்த ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஒரு நிறுவனம் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்தது என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை ‘நேர்மையாக’ நடக்கும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. இன்னொரு வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் கடுமையான வார்த்தைகளை அதே நாள் செய்திகளில் பார்க்க முடிந்தது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்திருக்கும் புனே பிரமுகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கேரள முன்னாள் மின்துறை அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அவர் மாநிலத்தின் மின்துறை அமைச்சராக இருந்த போது, இடமலையார் அணையில் நீர்மின் திட்டப்பணிக்கு ஒப்பந்தம் கொடுத்த வகையில் மாநில அரசுக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இருபது வருடங்களுக்கு முன்னால் இப்போதைய கேரள முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் வழக்கு தொடர்ந்தார். மாநில உயர்நீதிமன்றம் பாலகிருஷ்ணனை குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் இப்போது கடந்த வியாழக்கிழமை ஒரு வருட கடுங்காவல் தண்டனையைக் கொடுத்திருக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் அது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை ஒரே நாளில் பார்க்கும்போது நீதிமன்றங்களின் மேல் யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதேசமயம் அந்த உணர்வுக்கு எதிராக அதே நாளில் இன்னொரு செய்தியையும் செய்தித்தாளில் பார்க்க முடிந்தது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் டாக்டர் பினாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருக்கிறது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் ராஜ துரோகக் குற்றம் செய்ததாகவும் அவருக்கு அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற உலக அறிஞர்களில் தொடங்கி உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்கள் வரை பினாயக் சென்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வருகிறார்கள். ஆனால் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இந்தக் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளவே இல்லை!

சில வாரங்களுக்கு முன்னால் இன்னொரு வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தைகளை சில நாட்களுக்குப் பிறகு அதுவே திருத்தம் செய்தது. ஒரிசாவில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற பாதிரியார் அவருடைய இரண்டு குழந்தைகளுடன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மதமாற்றம் குறித்து சில சொற்களை உதிர்த்துவிட்டு பிறகு சரிசெய்து கொண்டது. அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தன்னுடைய நீதிமன்ற அறையை கங்கை நதியில் இருந்து நீர் எடுத்து வந்து கழுவினாராம். அவர் ஏன் அப்படிச் செய்தார்? அவருக்கு முன்னால் அந்த அறையை பயன்படுத்திய நீதிபதி ஒரு தலித் என்பது காரணமாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்னொரு நீதிபதி என்ன செய்திருக்கிறார் பாருங்கள். “குழந்தைகளின் ஜாதகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு பள்ளிகளில் சேருங்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்களா என்று பள்ளிகள் அறிந்து கொள்ள முடியும்” என்று சொல்லி இருக்கிறார். செய்தித் தாளில் இந்த செய்தி வந்தபிறகு, இந்திய குழந்தைகள் உரிமை ஆணையம் இது குறித்து ஓர் அறிக்கையைக் கேட்டிருக்கிறது!

மும்பை உயர்நீதிமன்றம் ‘சோதிடம் ஓர் அறிவியல்’ என்று ஒரு வழக்கில் சென்ற வாரம் அறுதியிட்டு சொன்னது. சோதிடத்தை அறிவியல் பாடமாக பல்கலைக்கழகங்களில் பரிசீலிக்கலாம் என்று 2004-ல் உச்சநீதிமன்றம் சொல்லி இருந்ததை மும்பை உயர்நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. நான்காயிரம் வருடங்களாகப் பழக்கத்தில் இருக்கும் சோதிடம் ஒரு நம்பகமான அறிவியல் கலை என்று மத்திய அரசின் சார்பில் அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு சொல்கிறதாம்! மூன்று வருடங்களுக்கு முன்னால் உத்தரப்பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி தீயில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளும் அவளுடைய அம்மாவும் திறந்த வெளியில் மலம் கழிக்கப் போகும்போது இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் எங்கே போய் மலம் கழிப்பார்களோ அந்த நிலத்துக்குச் சொந்தக்கார இளைஞன் அந்த சிறுமியை தீயில் தள்ளினான் என்பது வழக்கு. அந்த சிறுமியின் அம்மாவைத் தவிர சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி இல்லை. ‘சிறுமி தீயில் விழும்போது அம்மா முகத்தை மறைத்திருந்ததால் என்ன நடந்தது என்பதை அவர் பார்த்திருக்க முடியாது’ என்று சொல்லி அந்த இளைஞனை நீதிபதி விடுதலை செய்தார் என்று ஒரு செய்தி! இந்த மாதிரி சில வழக்குகளில் வரும் தீர்ப்புகளைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் மேல் முறையீடுகளில் பெரும்பாலும் நியாயம் கிடைத்து விடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

வேறு எந்தக் காலத்தையும் விட இந்த காலகட்ட நிர்வாகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ஊழல்கள் அனைவரையும் தலைகுனியச் செய்கின்றன. மக்களுடைய வரிப்பணம் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது. ‘நேர்மையின் சிகரம்’ என்று ஊடகங்கள் கொண்டாடும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கீழ் இருக்கும் விண்வெளித் துறையிலேயே ஊழல் புகார் வந்திருக்கிறது. ஊடகங்களில் செய்தி கசிந்த பிறகு சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்கிறார்கள்!

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நிர்வாகத்தில் நேர்மையை எதிர்பார்க்க முடியாத நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருப்பவர்கள் நீதிமன்றங்களின் நேர்மையான செயல்பாட்டை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதிலும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

கூட்டத்தில் கலக்கும் சூப்பர் ஹீரோ

உலகத்தை மாற்ற வேண்டும் என்று ஏராளமானவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; ஆனால் அவர்களில் பலர் தங்களைக் கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அப்படி மாற்றிக் கொள்ளாதவர்கள் கால மாற்றத்தில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். நடிகர் சிரஞ்சீவி தன்னை எளிதாக மாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசத்துக்கும் மாற்றாக கடந்த 2008-ல் ஓர் அரசியல் கட்சியை ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி தொடங்கினார்; திருப்பதியில் ஆரவாரமாகத் தொடங்கிய அவருடைய கட்சிக்கு அவர் பிரஜா ராஜ்யம் என்று பெயரிட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் அவருடைய வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 294 இடங்களைக் கொண்ட ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யம் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு நடந்த முதல் சட்ட மன்றத் தேர்தலில் நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆரும் என்.டி.ராமராவும் அவரவர் மாநிலங்களில் முதலமைச்சர்களானார்கள். 1972-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., 1977-ல் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். என்.டி.ராமராவ் 1982-ல் தெலுங்குதேசம் கட்சியைத் தொடங்கி 1983-ல் ஆந்திர முதலமைச்சரானார். இவர்களைப் போலவே 2008-ல் கட்சியைத் தொடங்கிய சிரஞ்சீவிக்கும் 2009 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வந்து விடலாம் என்ற கனவு இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய அந்தக் கனவு சிதைந்தது; அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை அவர் பொறுத்திருக்கலாம்; ஆனால் அப்போதும் தனியாக கட்சி நடத்தி, காங்கிரஸையும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும் எதிர்த்து மூன்றாவது அணியாக நின்று முதல்வராவது மிகவும் கஷ்டம் என்பதை சிரஞ்சீவி புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது.

புலி வாலைப் பிடித்தாகி விட்டது. பிடித்த அந்த வாலை இனி விட முடியாது. அதனால் அரசியலில் இருந்து தான் ஆக வேண்டும். தனியாக கடை நடத்தி அதிகார மையங்களின் கதவருகே போக முடிகிறது; ஆனால் கதவைத் திறந்து மையத்துக்குள் போக முடியவில்லை. முதலமைச்சர் பதவியை எப்படியும் எதிர்காலத்தில் எட்டிப் பிடித்தாக வேண்டும்; என்ன செய்வது? அதுவரை தற்காலிகமாக ஏதாவது ஓர் ஏற்பாட்டில் ஏதாவது பதவியில் இருந்து அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும். மாநிலத்திலோ மத்தியிலோ அமைச்சராக இருக்கலாம். மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் மிகவும் கடுமையான நெருக்கடியிலும் இருக்கிறது. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது தீவிரமான போராட்டங்கள் நடக்கின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தனியாக கட்சி தொடங்கி இருக்கிறார். சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனை ஆதரிக்கிறார்கள். ஜெகன் மோகன் எப்போது நினைத்தாலும், அப்போது ஆட்சியில் இருந்து காங்கிரஸ் இறங்க வேண்டியதுதான் என்ற நிலை!

கதாநாயகிக்கு வில்லன்களால் ஆபத்து வரும்போது, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் திடீரென்று குதித்து நாயகியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது சினிமாவில் கதாநாயகர்களுடைய குணம்! ஆந்திர மாநிலத்து காங்கிரஸ் ஆட்சி நெருக்கடியில் இருக்கிறது. எங்கிருந்தோ சிரஞ்சீவி வந்தார். தன்னுடைய பிரஜா ராஜ்யம் கட்சியை அப்படியே காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொள்கிறேன் என்றார். இப்போது ஆந்திர முதல்வர் கிரண்ரெட்டி சற்று மூச்சு விடலாம்; சிரஞ்சீவி கட்சியிலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஜெகன்மோகனை ஆதரிக்கிறார்கள். அவர்களைக் கணக்கில் எடுக்காமல் தவிர்த்து விட்டால் கூட, 16 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக கிடைத்திருக்கிறார்கள். இந்த ‘டீல்’ காரணமாக சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கலாம். உரிய நேரத்தில் அல்லது அடுத்த தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் வேட்பாளராக சிரஞ்சீவி முன்னிறுத்தப்படலாம்; அல்லது இப்போதே மாநில அரசியலில் முக்கிய பொறுப்பைக் கொடுத்து தெலுங்கானா, ஜெகன்மோகன் பிரச்னைகளை எதிர்கொள்ளச் செய்யலாம்; டெல்லியில் அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து என்.டி.ராமராவ் அரசியல் நடத்தினார். அதற்கு நேர் எதிராக, சிரஞ்சீவி மாநிலக் கட்சியைத் தொடங்கி பிறகு காங்கிரஸூடன் இணைகிறார்!

வில்லன்களாலும் வில்லிகளாலும் சூழப்பட்டிருக்கும் அபாயமான ஒரு நிலையில் இருந்து ஹீரோயினை சினிமா கதாநாயகர்கள் காப்பாற்றுவார்கள் என்ற கதை தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது? நேரடியாக அரசியல் பிரசாரம் செய்வதற்கு ரஜினியும் கமலும் வர மாட்டார்கள் என்றாலும் பொது மேடைகளில் முதல்வர் கருணாநிதியின் அருகில் ‘துவார பாலகர்களாக’ அவர்கள் தரிசனம் தருகிறார்கள். விஜய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக வார்த்தைகளை உதிர்க்கிறார். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களால் தொல்லைக்குள்ளாவதை முதல்வர் இருந்த மேடையில் அஜித் போட்டு உடைத்தார். முன்னாள் ஹீரோ கார்த்திக் இப்போது காமெடியன் போல் இருந்தாலும் ஆட்சிக்கு எதிரான அணியில் தன்னை இணைத்திருக்கிறார். ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் முன்னாலேயே தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கி இதுவரை தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் பிடிபிடியென்று மேடைகளில் பிடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் இந்த முறை தன்னையும் தன் கட்சியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கூட்டணி சேரும் முடிவை எடுப்பார் என்று அவருடைய பேச்சுக்களில் இருந்து அறிய முடிகிறது!

சரி, விடுங்கள்! காங்கிரசில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி விலகினால், சிரஞ்சீவி வந்து சேர்கிறார். புதுவையில் முன்னாள் முதல்வர் ரெங்கசாமி காங்கிரசில் இருந்து விலகி புதுக் கட்சி தொடங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ‘அறிவுரை’ சொல்லி இருக்கிறார். ”காங்கிரசின் அடையாளத்தை இழந்துவிட்டால், மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் கூட சாதாரண மனிதர்களாகி விடுவார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார். மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதலமைச்சர் வைத்தியலிங்கம் எல்லோருக்கும் காங்கிரஸ் தான் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். தனிமனிதர்களை விட அமைப்பு பெரியது என்பதை வலியுறுத்துவதற்காக ஒருவர் இப்படிச் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், நம்முடைய மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை முதன்முதலாக மத்திய நிதியமைச்சராக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர்த்தியது அவர் இப்போது குறிப்பிடும் காங்கிரஸ் அல்ல; ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் என்ற மாநிலக் கட்சியே அவருக்கு அப்படி ஒரு பெருமையையும் அடையாளத்தையும் கொடுத்தது! தமிழ் மாநில காங்கிரசும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்த கட்சிதான் என்று சிலர் விளக்கம் கொடுக்க முன்வரலாம். அப்படியென்றால், அதே விளக்கத்தை ரெங்கசாமியாலும் கொடுக்க முடியும். இப்போது கட்சியை காங்கிரசில் இணைத்ததன் மூலம், சிரஞ்சீவி வேறொரு அடையாளத்தை இழந்திருக்கிறார்! அவர் மத்திய அமைச்சராகலாம்; ஆந்திர முதலமைச்சர் ஆகலாம்; ஆனால் மக்கள் அவரை வேறுவிதமாகவே இதுவரை பார்த்தார்கள்; யாரையும் எளிதில் வீழ்த்தும் சூப்பர் ஹீரோ அவர் என்று நினைத்தார்கள்; காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததன் மூலம் அந்த பிம்பத்தை சிரஞ்சீவி இழந்திருக்கிறார்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

“இந்த சதுக்கத்தில் இருந்து வெளியில் வரும்போது நான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பேன். அல்லது இங்கேயே செத்துப் போவேன்” என்று ஆவேசமாக சொல்கிறான் ஒரு இளைஞன். இந்த ரிப்போர்ட்டர் இதழ் உங்கள் கைகளில் இருக்கும் போது அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. இரண்டுமே நடக்காமல் அந்த இளைஞன் அந்த விடுதலை சதுக்கத்தில் இருந்து கொண்டே அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கலாம். அவன் அங்கே தனியாளாக இல்லை. ‘அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இங்கிருந்து நகர மாட்டோம்’ என்ற முடிவுடன் ஏராளமான மக்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு, மருந்துகள் எல்லாம் தினமும் வெளியில் இருந்து மக்கள் கொண்டு வந்து தருகிறார்கள். தற்காலிக கூடாரங்கள் மருத்துவமனைகளாக செயல்படுகின்றன. சிறுவர் சிறுமியரில் இருந்து முதியவர்கள் வரை எல்லா வயதைச் சேர்ந்தவர்களும் அங்கே இருக்கிறார்கள்.

ஆனால் அந்த சதுக்கத்துக்கு வெளியே 25 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஒரு கூட்டம் வருகிறது. அதிபர் முபாரக்குக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பிக் கொண்டு அவர்கள் வருகிறார்கள். குதிரைகளிலும் ஒட்டகங்களிலும் அவர்களில் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். போராடிக் கொண்டிருக்கும் எகிப்தியர்களை அந்தக் கும்பல் தாக்குகிறது. மதமோ, இனமோ, மொழியோ அவர்களைப் பிரிக்கவில்லை. இருந்தும் அந்தக் கும்பல் கையில் இருக்கும் துப்பாக்கியால் சுடுகிறது. போராட்டக்காரர்களிடம் பிடிபட்ட அந்தக் கும்பலில் சிலர் காவலர்களுக்கான அடையாள் அட்டையுடன் இருந்தார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய செய்தி. அதிபருடைய ஆதரவாளர்கள் என்ற போர்வையில் சீருடை அணியாத காவலர்கள் போராளிகளைத் தாக்குவது எல்லா இடங்களிலும் ‘நிர்வாக நடைமுறை’ போலிருக்கிறது!

பல மணி நேரம் இரண்டு தரப்பில் இருந்தும் கற்கள் வீசப்படுகின்றன. முதல் நாள் மூவர் பலி என்ற செய்தி வந்தது. அடுத்த நாள் பத்து பேர் இறந்து போனதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயம் அடைந்திருப்பதாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. ஜனவரி மாதம் 25-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தின் முதல் வாரத்தில் பாதுகாப்புப் படையினருடைய தாக்குதலுக்கு 100 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்பது வேறு செய்தி. இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது நிலைமை கட்டுக்குள்ளும் வந்திருக்கலாம்; அல்லது இன்னும் மோசமாகப் போய் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

உயிரையும் கொடுக்கத் தயாரான நிலையில் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கும் அவர்கள் ஏன் அதிபர் முபாரக்கை பதவி விலகச் சொல்கிறார்கள்? 1967-ம் வருடத்தில் இருந்து எகிப்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. 1980-ம் வருடம் விலக்கிக் கொள்ளப்பட்டு 18 மாதம் மட்டுமே ஜனநாயகக் காற்றை எகிப்து மக்கள் சுவாசித்தார்கள். அதன் பிறகு 1981-ல் அதிபர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நெருக்கடிநிலை கொண்டுவரப்பட்டது. எகிப்திய அரசமைப்புச் சட்டம் என்னென்ன உரிமைகளை எல்லாம் பாதுகாப்பதாக சொல்லி இருக்கிறதோ, அவற்றில் பல முடக்கப்பட்டன. செய்தித் தணிக்கை அமலில் இருக்கிறது. வீதி ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டன. ஆட்சிக்கு எதிரான சிறு முணுமுணுப்பு கூட ஆயுதப் படையினரால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது. இந்த நெருக்கடிநிலைச் சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 17000 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும் சேர்த்தால், அரசியல் கைதிகள் 30000 பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது.

ஏறத்தாழ முப்பது வருடங்கள் அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், தீவிரவாதிகள், மதவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று பல்வேறு பிரிவினரும் சேர்ந்து ஒரே அணியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு ஒரே கோரிக்கைதான். “முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும்.” ஆனால் அவர் என்ன சொல்கிறார்? “அரசியல் அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறேன். வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடாமல் விலகிக் கொள்கிறேன். அதுவரை என்னை பதவியில் நீடிக்க விடுங்கள்” என்கிறார். ஆனால் ஜனநாயகத்துக்கான போராட்டக்காரர்களோ, “அவர் இப்போதே பதவியில் இருந்து இறங்க வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இப்படித்தான் பல மன்னர்களின் சாம்ராஜ்யங்கள் சரிகின்றன. அவலமாக வாழ்ந்து வரும் வாழ்க்கை, மக்களை வீடுகளில் இருந்து வீதிக்கு விரட்டுகிறது. விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒவ்வொரு வீட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள், ஆட்சியாளர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் பணத்தையும் சொத்துக்களையும் குவித்துக் கொண்டு ஆடும் ஆடம்பர ஆட்டங்கள் ஆகியவை ஆட்சிக்கு எதிராக இனம்புரியாத வெறுப்பையும் கோபத்தையும் மக்களிடம் வளர்க்கின்றன. ஆட்சியில் இருந்து கொண்டு தங்களை வதைத்த சர்வாதிகாரியைப் பதவியில் இருந்து கீழே இறங்கு என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைப்பதற்கு இந்த உணர்வுகள் போதுமானவையாக இருக்கின்றன.

ஒரே ஒரு வாக்கியம் அல்லது கருத்து, மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து அவர்களை செயல்படத் தூண்டியது என்றால் அது மாபெரும் சக்தியாக வடிவெடுக்கும் என்பதை பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. மிகவும் சமீபத்திய உதாரணம் துனிசியா நாட்டில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி. இயல்பாக மக்களிடம் எழக் கூடிய போராட்ட உணர்வை வழிநடத்துவதற்கு அரசியல் தலைமை திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையிலும், ஒரு இளைஞனின் தீக்குளிப்பு ஏற்கனவே உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த மக்களை வீதிக்கு வரவழைத்தது. “ஏழை வர்க்கமே இணைந்து விட்டால், கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்” என்ற வரிகள் சொல்வதைப் போல, அந்த நாட்டின் அதிபர் நாட்டை விட்டே ஓடிவிட்டார். “விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்து விட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு” என்று நேபாள மக்கள் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.

இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உலகத்தின் இன்ன பிற பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவே அவதாரம் எடுத்த அமெரிக்கா, பல நாடுகளில் தங்களுடைய நலனைப் பாதுகாக்கும் சர்வாதிகாரிகளையும் மன்னர்களையும் காப்பாற்றி வருகிறது. கடந்த முப்பது வருடங்களாக அப்படி பாதுகாக்கப்படும் சர்வாதிகாரிதான் எகிப்து அதிபர் ஹாஸ்னி முபாரக். அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் எகிப்து, அமெரிக்காவிடம் இருந்து மிகவும் அதிகமான அளவில் உதவிகளைப் பெறுகிறது. எகிப்து மக்களுடைய ஒற்றுமையைப் பார்த்து அதிர்ந்து போன இஸ்ரேல், புதிய கோஷத்தின் மூலம் அந்த ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது. “நான் ஆட்சியை விட்டு இறங்கினால், நாட்டில் குழப்பமும் சீர்குலைவுமே நடக்கும்” என்று முபாரக் சொல்வதை இஸ்ரேல் வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது. “முபாரக் ஆட்சி இல்லாவிட்டால் எகிப்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கை ஓங்கி விடும்” என்று சொல்லி இஸ்ரேல் அமெரிக்காவிடம் முபாரக்கைக் காப்பாற்றுமாறு கோருகிறது. அமெரிக்கா என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. ஆனால், பல நாடுகளில் இருக்கும் அமெரிக்க எடுபிடி அரசுகள் ஒவ்வொன்றாக அதிகாரத்தை இழந்து கொண்டிருக்கின்றன.

எது எப்படியோ வன்முறை இல்லாத அஹிம்சைப் போராட்டம் மூலம் ஒன்றுபட்டு இருக்கும் மக்கள் சக்தியை எந்த அடக்குமுறையும் பணிய வைக்க முடியாது என்று எகிப்திய மக்கள் வரலாறு படைத்திருக்கிறார்கள். அவர்களை ஆதரிக்க வேண்டியது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கும் அனைவருடைய கடமை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

ஆசை தவிர்

பதவி, பணம் ஆகியவை தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல; ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே அவை மகிழ்ச்சி தரும். அதற்குப் பிறகும் அவற்றின் பின்னால் ஓடினால் அதைப் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசி இருக்கிறார். கடந்த பிப்ரவரி முதல் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் ரண்பீர் சிங்கின் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் முன்னிலையில் சோனியா காந்தி இப்படிப் பேசி இருக்கிறார். ”நம்முடைய சுயநலத்தைத் தள்ளி வைத்துவிட்டு பொதுநலத்துக்காக நாம் பாடுபட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாம் மறக்கக் கூடாது” என்றும் அந்த மேடையில் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

எங்கே, எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இப்படிப் பேசி இருக்கிறார் என்ற கேள்வி ஒரு மனிதனின் மனதில் எழுந்தால், அதை ஒருவர் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அவர் எந்த இடத்தில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்? மத்திய தொலைத் தொடர்பு துறையின் விழா ஒன்றிலே சோனியா காந்தி இப்படிப் பேசி இருக்கிறார்; சோனியா காந்தியின் அந்தப் பேச்சு ஒரு தற்செயலான நிகழ்வா? அல்லது அந்தத் துறை தொடர்பாக பல மாதங்களாக நடந்து வருகின்ற சம்பவங்கள் அவரைப் பாதித்து இருப்பதால் அந்த மேடையையே இப்படிப் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டாரா? இப்படிப் பேசுவதற்கு முந்தைய நாள் தான், அவர் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு தி.மு.கவுடன் கூட்டணியைத் தொடர்வது தொடர்பாக அவர்கள் இருவரும் கலந்து உரையாடி இருக்கிறார்கள்!

அதனால் தி.மு.க.அமைச்சர்களை மனதில் வைத்து அவர் பேசி இருக்க மாட்டார் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம். அது தவிரவும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் செயல்பாட்டால் மட்டுமே மத்திய அரசுக்கு நெருக்கடி வரவில்லை. பல்வேறு பதவிப் போட்டிகளாலும், பணம் குவிக்கும் ஊழல்களாலும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களே மத்திய ஆட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இறந்த காலத்தில் எழுதுவது கூடத் தவறு என்பதை தினமும் செய்திகளில் வெளியாகும் முறைகேடுகள் உணர்த்துகின்றன. போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களைப் பற்றியும் அவர் பேசி இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் அவர் யாரை நோக்கி அந்த அறிவுரையை சொல்லி இருக்கிறார்? அரசியல் கட்சிகளையோ அல்லது அந்தக் கட்சிகளின் தலைவர்களையோ அவர் அப்படிக் கேட்டுக் கொள்ளவில்லை என்றால் வாக்களிப்பதோடு தங்கள் கடமை முடிந்து விடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் நூறு கோடிக்கும் அதிகமான இந்திய மக்களைப் பார்த்தே அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்!

இந்த கோடிக்கணக்கான மக்கள் எந்தப் பதவிக்காக ஆசைப்பட்டிருக்கிறார்கள்? இவர்கள் நிலையில் இருக்கும் எந்த ஒருவரும் மத்திய அமைச்சர் பதவிகளுக்காக அரசியல் தரகர்களிடம் பேரம் பேசுவதில்லை; ஆனால், அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களுக்கு சில பதவிகள் தேடி வருகின்றன. அவர்களுடைய வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருகிறவர்கள் ‘நன்றி உணர்வுடன்’ எடுக்கும் சில கொள்கை முடிவுகள், இந்த சாதாரண மக்களுக்கு அந்த பதவியைக் கொடுத்து விடுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு ‘சிவலோக’ பதவி இந்த வழியிலேயே கிடைத்தது. மீன்பிடிப்பதையும் கிடைத்த மீனை விற்று வாழ்க்கை நடத்துகிறவர்களுக்கு அவர்கள் கேட்காமலே இலங்கை கடற்படை ‘வைகுண்ட’ பதவியைக் கொடுக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அநியாயமான அந்தப் படுகொலைகளின்போது கூட அந்நியக் கொலையாளிகளைக் கண்டிக்காமல், ‘பேராசையால்’ மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறோம்!

கடுமையான விலைவாசி உயர்வாலும் தொழில் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்காக நடக்கும் நிலப்பறிப்பாலும் இன்னும் பட்டியலிடப்படாத ஏராளமான காரணங்களாலும் வெறுமனே உயிரை மட்டும் உடலில் தக்க வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் நூறு கோடி மக்களைப் பார்த்து ’பதவி, பணம் தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல’ என்று சோனியா காந்தி சொல்வார் என்றால், அதைவிட குரூரமான நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது! அவர் மக்களைப் பார்த்து சொல்லவில்லை என்றும் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்ள வேண்டிய முறையையே அவர் பேசினார் என்றும் விளக்கங்கள் தரப்படலாம். அப்படி என்றால் அவர் இந்த கருத்தை நாடாளுமன்றத்தில் பேசி இருக்க வேண்டும்; காங்கிரஸ் செயற்குழுவிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் இந்த அறைகூவலை விட்டிருக்கலாம். அதையும் தாண்டி ஒரு படி மேலே போக வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் உறுப்புக் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கலாம்! தேசிய வழிகாட்டும் குழுவின் தலைவர் என்ற முறையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கி மத்திய அமைச்சரவைக்கு உண்மையிலேயே நல்ல நிர்வாகப் பண்புகளைக் கற்றுக் கொடுக்கலாம்!

ஆனால் இவர்களிடம் எல்லாம் சோனியா காந்தி இப்படி ஆலோசனைகளைச் சொன்னதாக செய்திகள் இல்லை. அப்படியே அவர் அவர்களிடம் அறிவுரை சொன்னாலும் அவர்கள் கேட்பார்களா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தம் தொடர்பாக ஆட்சிக்கும் தேசிய ஆலோசனைக் கமிட்டிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அரசியல்வாதிகள் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ வழிகாட்டும் நெறிமுறைகளையோ சொல்ல முடியாது போலிருக்கிறது. சினிமா நடிகர்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வரை எல்லோரும் சாதாரண மக்களுக்கு மட்டும் இலவச ஆலோசனைகளை வஞ்சம் இல்லாமல் அள்ளி வழங்குகிறார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ அரசியலிலோ கொஞ்சம் பிரபலமாகி விட்டாலே, தாம் சொல்வதை மக்கள் கேட்டு நடப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நம்முடைய பிரபலங்கள் மத்தியில் இருக்கிறது. ஞானபீட்த்தில் அமர்ந்து கொண்டு மக்களை கீழ்நோக்கிப் பார்த்து அறிவுரை சொல்வது பலருக்கும் மிக எளிதாக வருகிறது!

நம்முடைய மக்கள் எதையும் தாங்குவார்கள். ”எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே, இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்” என்று சொன்னால் போதும் போல இருக்கிறது. “எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” என்பதும் “ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள்” என்றும் சொல்வதன் மூலம் தங்கள் மீது விழும் அடிகளுக்கு எதிராக மக்களை முணுமுணுக்க விடாமல் வைத்திருக்கிறோம். அவர்களில் 65 சதவீதம் பேர் இரவில் எதுவும் சாப்பிடாமல் பட்டினியோடு படுக்கப் போகிறார்கள் என்று அரசே அறிக்கை தந்தாலும் அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. பாதிக்கு மேல் படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களாக இருந்தாலும் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் பேர் மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்தாலும் ஆட்சியாளர்கள் வருத்தப்படுவதில்லை. ஒருவேளை இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மக்களில் சிலர் புறப்பட்டால் என்ன செய்வது?

“பதவி, பணம் தரும் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல” என்று அவர்களுக்கு ஆலோசனை சொல்வோம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

அத்தனைக்கும் கோபப்படு!

“நேர்மையே உன் விலை என்ன?” என்ற தலைப்பில் சென்ற இதழுக்கான பத்தியை எழுதி அனுப்பிய அடுத்த நாள் நேர்மைக்கு ஒருவர் உயிரையே விலையாகக் கொடுத்த செய்தி வந்தது. குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் அந்தக் குடும்பத்தின் இழப்பும் கதறலும் நம்முடைய காதுகளை எட்டவில்லை. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் வரை மகாராஷ்டிர மாநிலத்தின் மாலேகான் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சித் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். சட்டவிரோதமாக பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விற்கும் பெட்ரோல் கலப்படக் கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார். வேறு வேலையாகப் போய்க் கொண்டிருந்த அவருடைய வழியில் ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது.

நாம் போகின்ற வழியில் நம்முடைய வேலையோடு தொடர்புடைய எத்தனையோ சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் அந்த இடத்துக்குப் போய் அங்கு நடக்கும் அத்துமீறல்களை பதிவு செய்கிறோம்? ஆனால் யஷ்வந்த் சோனாவானே நம்மைப் போல சுயநலம் கொண்டவர் இல்லை. அரசாங்கம் போட்டிருக்கும் சட்டங்களும் விதிகளும் நிர்வாகிகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்று தீவிரமாக அவர் நம்பினார். அதனால் அவருடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த டேங்கர் லாரியில் என்ன நடக்கிறது என்று போய்ப் பார்த்தார். அங்கு நடந்து கொண்டிருந்த கலப்படப் பணியை அவருடைய செல்போனில் படம் பிடித்தார். அதற்குப் பிறகு அவருடைய வாகனத்துக்கு அவர் வருவதற்குள் ரவுடிக் கும்பல் ஒன்று அவரைச் சுற்றியது; அடித்துத் துவைத்தது; தாக்குதலைத் தாங்க முடியாமல் கீழே விழுந்த அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது. இந்திய ஆட்சி நிர்வாகத்தை மீண்டும் ஒரு முறை வன்முறையாளர்கள் தங்கள் காலடியில் மண்டியிடச் செய்திருக்கிறார்கள்!

இந்த வன்முறையாளர்கள் தனிநாடு கேட்டுப் போராடும் ‘தீவிரவாதிகள்’ அல்லர்; பழங்குடி மக்களின் நிலத்தைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்று துப்பாக்கிகளுடன் துணை ராணுவத்தை எதிர்கொள்ளும் ‘மாவோயிஸ்டுகளும்’ அல்லர்; ஒருவேளை இந்த மாவோயிஸ்டுகளையும் ‘தீவிரவாதிகளையும்’ அடக்கி ஒடுக்குவதற்கும் அழித்து ஒழிப்பதற்கும் பயன்படுகின்ற ‘தேசபக்தி கொண்டவர்களாக’ இந்த வன்முறைக் கும்பல் இருக்கக் கூடும். அரசாங்கத்தின் விதிகளை செயல்படுத்தும் ஓர் அதிகாரியைக் கொல்லும் துணிச்சலை இந்தக் கும்பல் எங்கிருந்து பெற்றது? ‘என்கவுண்டர்’ பற்றிய பயமோ, சிறைத் தண்டனை குறித்த கவலையோ கொஞ்சமும் இல்லாமல் இவர்களால் கொலைகளை இரக்கமில்லாமல் செய்ய முடிகிறது என்றால், இவர்களுக்குப் பின்னால் நின்று இயக்குபவர்கள் அதிகாரம் மிகுந்தவர்களாகத் தான் இருக்க முடியும்.

இந்த அதிகாரம் மிகுந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? சலுகை விலையில் 12 ரூபாய்க்குக் கிடைக்கும் மண்ணெண்ணெயை ஏறத்தாழ 60 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலுடன் கலப்படம் செய்கிறார்கள். சட்டவிரோதமாக நடக்கும் இந்தத் தொழிலில் ஒரு வருடத்துக்கு 10000 கோடி ரூபாய் புழங்குகிறது என்று ஒரு செய்தி சொல்கிறது. நியாயவிலைக் கடைகளில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக சலுகைவிலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெயில் கிட்டத்தட்ட 38.6 சதவீதம் கறுப்புச் சந்தைக்கு கடத்தப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ‘அசோசம்’ எனப்படும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசிடம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? ரேஷன் கடை ஊழியரில் தொடங்கி சிவில் சப்ளை டிபார்ட்மெண்ட் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை இந்தக் கொள்ளையில் பங்கு பெறுவதால்தான் இந்த அநியாயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அட்டைகள் இருக்கின்றனவோ, அவற்றைப் பொறுத்து மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அது அட்டை வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட அளவில் மக்கள் வாங்குவதற்கு முன்னால், ‘சரக்கு இருப்பு இல்லை’ என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிறகு நிலுவையில் இருக்கும் மண்ணெண்ணெயை கறுப்புச் சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் எல்லா குடும்ப அட்டைகளுக்கும் கெரசின் கொடுக்கப்பட்டதாக பதிவு செய்து கொள்கிறார்கள். இது நன்றாகத் தெரிந்தாலும் ‘பறக்கும் படை’ அதிகாரிகள் அவ்வப்போது நியாயவிலைக் கடைகளை சோதனை போடுவார்கள். சோதனைகளைப் பார்த்தவுடன் நாம் எல்லாம் நியாயமாக நடப்பதாக நம்பி விடுவோம். பிறகு மாஃபியா கும்பல் கலப்பட வேலையை செய்யும். காவல்துறையின் உதவி இல்லாமல் இப்படி நடக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயம் எல்லாம் தெரியாமல் யாராவது நேர்மையான போலீஸ் அதிகாரி மாஃபியா கும்பலின் தொழிலை முடக்க நினைத்தால் அவரை மாற்றுவதற்கு அரசியல்வாதியின் துணை தேவை. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் ஓர் அணுவும் அசையாது!

இந்த சுழல் வட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற முடிவுக்கே ஒருவர் வர நேர்கிறது. இந்தக் கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் யாராவது ஒருவர் தீவிரமாக நேர்மையாக இருந்தால், அவரை அந்த கும்பல் உயிருடன் விடுவதில்லை. அப்படி யாராவது ஒரு நேர்மையாளர் கொல்லப்படும்போது, நாட்டில் மக்கள் மத்தியில் எழும் எழுச்சியை அடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த சில மாதங்களில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும். பழைய நிலை மீண்டும் தொடரும் என்பதே இன்றைய நடைமுறையாகத் தெரிகிறது. இப்படித்தான் 2005-ல் மஞ்சுநாத் சண்முகம் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கொல்லப்பட்டார். கலப்பட பெட்ரோலை விநியோகித்த இரண்டு பெட்ரோல் பங்குகளை அவர் ’சீல்’ வைத்து மூடினார். அவருடைய தலையீட்டை விரும்பாத எண்ணெய் மாபியா அவரைக் கொன்று விட்டு அதனுடைய லாப வேட்டையைத் தொடர்ந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு உ.பி.யில் பிரஜேந்திர விக்ரம் சிங் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்து அவரைக் கத்தியால் குத்தியது.

ஆனால் முன்னெப்போதையும் விட இந்த முறை மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் மாநில அரசு சில நடவடிக்கைகளை வேகமாக எடுக்கிறது. 200 பெட்ரோல் நிலையங்களில் ‘சோதனை’ நடந்திருக்கிறது. எண்ணெய் டேங்கர்கள் எங்கு செல்கின்றன என்பதைக் கண்டறியும் ஜி.பி.எஸ் எனப்படும் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்கிறது அரசு. சலுகை விலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தைக்குப் போகக் கூடாது என்பதற்காக, நியாயவிலைக்கடை கெரசின் நிறத்தை நீலமாக்கிப் பார்த்த அரசு, அதன் பிறகு அனைத்தையும் கைவிட்டது. எண்ணெய் மாஃபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக லீனா மெஹெண்டேல் என்ற அதிகாரி முன்வைத்த பல ஆலோசனைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று தற்போது செய்தி போடுகிறார்கள். இப்போதும், யஷ்வந்த் சோனாவானே கொலை செய்யப்பட்டதாலும் அந்த செய்தியைக் கேட்டு அந்த மாநில மக்கள் எழுச்சியுடன் அந்த அரசை எதிர்ப்பதாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்கிறது!

பெட்ரோலில் மட்டுமல்லாமல், பாலில் கலப்படம் செய்யும் தொழிலும் அந்த மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறது ஒரு செய்தி. மத்திய அரசில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு கூட்டணி நிர்ப்பந்தங்கள் தடையாக இருக்கிறது என்கிறார்கள். மனித உயிர்களோடு விளையாடும் கலப்படக் கும்பல்களை இல்லாமல் ஒழிப்பதற்கு எது தடையாக இருக்கிறது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

நேர்மையே உன் விலை என்ன?

“அவர் நேர்மையாக இருந்தவர்தான். ஆனால் இப்போது அவரை அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவர் ஊழல் செய்யும் அமைச்சர்களைப் பாதுகாக்கிறார்” என்று மூத்த வழக்கறிஞரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களில் ஒருவருமான ராம் ஜேத்மலானி ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னார். யார் அந்த ‘அவர்’ என்பதை இன்றைய அரசியலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தனியாக விளக்க வேண்டியதில்லை. “இந்த அரசாங்கம் ஊழல்கள் நிறைந்த அரசாங்கம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்” என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் டாக்டர் மன்மோகன்சிங்கை கண்டனம் செய்தார்!

ராம் ஜேத்மலானி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்; சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் அவர் தன்னை இணைத்துக் கொள்பவர் என்று சித்தரிக்கப்பட்டவர்; சத்தீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்ட மருத்துவர் பினாயக்சென்னுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் கட்டணம் எதுவும் வாங்காமல், வாதாடப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதைப் போல பல வழக்குகளில் ‘பொதுவான மக்கள் மனநிலைக்கு’ எதிரான பல செயல்களை அவர் உற்சாகமாக செய்பவர். அதனால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். ‘சொல்வது யார் என்பது முக்கியமில்லை; என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து அது உண்மையா என்று பார்ப்பதே அறிவு’ என்று நமக்கு காலம் காலமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய ‘துரதிர்ஷ்டம்’ என்ன என்றால், நமக்கு இந்த விளக்கங்களை எல்லாம் கொடுத்தவர்கள், ‘பொருளைப்’ பார்க்காமல் அதைப் பேசுபவர்கள் யார் என்ற மரபணு ஆராய்ச்சியில் அடிக்கடி இறங்கி விடுவதுதான்!

ராம் ஜேத்மலானி சொன்னார் என்பதை விட்டு விடுங்கள். கடந்த சில மாதங்களாக பல ஊடகங்களில் பல பத்திரிகையாளர்களும் பல அரசியல் விமர்சகர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ‘நேர்மை’ குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நேர்மை என்பது என்ன? உங்களுக்குக் கொட்டிக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், அவர்களிடம் இருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் இருப்பது மட்டும்தானா? மன்மோகன்சிங் கோடிக்கணக்கான ரூபாய்களை முறைகேடாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அவருடைய ‘மோசமான எதிரி’ கூட குற்றம் சாட்டுவதில்லை. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் தங்கமும் வைரமுமாக வாங்கிக் கொடுத்தார் என்று எந்தப் பத்திரிகையும் எழுதியதில்லை. டெல்லிக்கு வெளியில் பண்ணை வீடுகளை விலைக்கு வாங்கினார் என்று யாரும் சொன்னதில்லை. ஆனாலும் ஊடகங்களில் அவருடைய ‘நேர்மை’ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஏனென்றால், அமைச்சரவை அமைப்பதில் இருந்து ஆட்சி நிர்வாகத்தின் அன்றாட செயல்கள் வரை ஒன்றிரண்டு நபர்களின் நலன்களை முன்னிறுத்தியே அனைத்தும் நடக்கின்றன என்று தெரிந்தாலும் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அவற்றை அவர் சகித்துக் கொள்கிறார். இந்திய ஜனநாயக அமைப்புக்கு உள்ளேயே ஒன்றை ஒன்று சமன்செய்து நிர்வாகம் ஜனநாயகரீதியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டம் சில நிறுவனங்களுக்கும் பதவிகளுக்கும் அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் கொடுத்திருக்கிறது. அந்தப் பதவிகளிலும் நிறுவனங்களிலும் ’சர்ச்சைக்குரிய’ மனிதர்களை நியமித்து, அவற்றின் சுதந்திரத்தன்மை அதிகமாகக் கேலி செய்யப்பட்டது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்கும்போதுதான்!

இந்தியாவின் பிரதமராக 2004 –ம் வருடம் மன்மோகன்சிங் பதவி ஏற்றார். 2007-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி அவர் மீது பல புகார்கள் சொன்னது. வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலே கூட அதற்கு எதிராக முணுமுணுப்பு இருந்தது. அதற்கும் முன்னால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிபுசோரன் உள்ளிட்டவர்களைத் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையம், ஊழல் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளில் சர்ச்சைக்குரியவர்கள் நியமிக்கப்பட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் எதுவும் பேசவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல் பட்டியல் நீண்டது. ஆனால் நாட்டின் பிரதமர் என்ற முறையிலோ காங்கிரஸ் கட்சியின் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற முறையிலோ டாக்டர் மன்மோகன்சிங் ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.

இப்படிச் சொல்வதற்காக நீங்கள் கோபமோ வருத்தமோ கொள்ளத் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் கூட டாக்டர் மன்மோகன்சிங் உண்மைக்கு மாறான தகவலைக் கொடுத்திருப்பதாக நம்ப இடம் இருக்கிறது. அவர் ஏறத்தாழ ஏழு வருடங்கள் பிரதமராக இருந்தாலும் கூட, அவர் மக்களவையின் உறுப்பினர் கிடையாது. மாநிலங்களவை உறுப்பினராகவே அவர் இன்னும் நீடிக்கிறார். இதில் சட்டவிரோதமாக என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சட்டவிரோதமாக இதில் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நேர்மையாளராக பெரும்பாலான மக்களால் போற்றப்படும் மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அஸ்ஸாம் மாநிலத்தில் அவர் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கி இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அவர் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அங்கு வசிப்பதாக சொன்னது அவருடைய நேர்மைக்கு உடன்பாடான செயலாக இருக்க முடியாது.

இந்தப் பட்டியல்கள் எல்லாம் சில ஆண்டுகளாக இருக்கின்றன. அப்போதெல்லாம் படிப்படியாக சரிந்து கொண்டிருந்த மன்மோகன்சிங்கின் நற்பெயர் ‘ராடியா கேட்’ எனப்படும் தொலைபேசி உரையாடல்கள், தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் ஊழல் புகார் போன்றவற்றிற்குப் பிறகு மிகவும் வேகமாக கீழிறங்கி விட்டது. மன்மோகன்சிங் போன்ற மனிதர்களை எப்போதும் உயர்த்திப் பேசும் பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி போன்றவர்கள் கூட அவருடைய நேர்மையைக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கலாம். கூட்டணி நிர்ப்பந்தங்கள் அவருக்கும் அவருடைய கட்சித் தலைமைக்கும் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை நியாயப்படுத்த முடியாது.

‘தவறான கட்சியில் சரியான மனிதர்’ என்று ஊடகங்களும் எதிர்த்தரப்புத் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதே சங்கடங்கள் அவருக்கும் இருந்தன. 2002-ல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்த போது, முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவி விலகச் செய்ய பிரதமர் வாஜ்பாயால் முடியவில்லை. மோடி பதவி விலக வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தகவல்கள் சொன்னாலும் அதை அவர் துணிச்சலுடன் கட்சிக்குள் எடுத்துச் செல்லவில்லை. இப்படி செயல்வடிவம் பெறாத வெற்று வார்த்தைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. செயல்வீரர்களாக அறியப்பட்டவர்கள் எல்லாம் அரசியல் சதுரங்கத்தில் வெறும் மேடைப் பேச்சாளர்களாகவும் முறையீடு செய்பவர்களாகவும் ‘சுருங்கிப்’ போவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

எந்தவித பின்னணியும் இல்லாமல் களத்தில் நின்று நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சாமான்ய மனிதர்கள் அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். அவர்கள் அநியாயமாக கொடியவர்களால் கொல்லப்பட்டும் வருகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவும் இன்ன பிற வழிகள் மூலமாகவும் ஊழலை அம்பலப்படுத்த முயலும் போராளிகளிடம் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேர்மை பற்றிய பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் மனிதனாக இருப்பதற்கே முதல் தகுதி நேர்மையாக இருப்பதுதான்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

இந்திய அவமானப் பணி அதிகாரிகள்!

அமைதியான காலை நேரம். ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்துக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டு நிர்வாகம் செய்த லண்டன் மாநகரம். மாநகரின் அந்தப் பகுதி எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஆனால் அன்று அந்த நேரத்தில் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண்ணின் கூக்குரலும் அழுகையும் கூச்சலும் வெளியில் கேட்டது. சில நொடிகளில் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார். அவரது உடலில் கீறல்கள்.. கீறல்களில் இருந்து ரத்தம் வழிந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் காவல்துறையிடம் புகார் சொன்னார்கள். விரைந்து வந்தது ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. ஆனால் வந்த அதிகாரியால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் ‘வெளிநாட்டு தூதரக’ அதிகாரிகளுக்கு சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் அந்த அதிகாரியின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தன!

ஒரு நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாக, அந்த நாட்டில் இருக்கும் வேறு நாட்டு தூதரகத்தில் ஏதேனும் தவறு நடந்தால் கூட, தவறு செய்யும் அந்த வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் ‘விடுபாட்டு உரிமை’ இருக்கிறது. அந்த விடுபாட்டு உரிமையில் இருந்து விலக்களித்து விசாரணையையும் அதன் மீதான நடவடிக்கையையும் எடுக்கலாம் என்று பிரிட்டனிடம் அந்த தூதரக அதிகாரியின் நாட்டு அரசு சொன்ன பிறகே அந்த அதிகாரி மேல் உள்ளூர் சட்டப்படி பிரிட்டன் நடவடிக்கை எடுக்கும்! பல சமயங்களில் தவறு செய்யும் அதிகாரிகள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதைத்தான் பார்க்க முடிகிறது!

‘அன்று டிசம்பர் 11. காலை 9.30மணி இருக்கும். என்.டபிள்யூ 11, காரிங்கம் ரோடு என்ற முகவரியில் ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் வந்தது. அந்த முகவரிக்கு நேரில் போய், 40 -களில் வயது இருந்த ஓர் ஆணிடம் விசாரித்தோம். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரி ஒருவர் அந்த நிகழ்வை உறுதி செய்தார். ஆனால், கொடுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாடு என்ன சொன்னது? ”நாங்கள் அந்த விவகாரத்தை கவனமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். இது தனிமனிதர்களின் அந்தரங்கமான விஷயம்; மிகவும் உணர்ச்சிமயமான விஷயம். இப்போதைய நிலையில் இது குறித்து கருத்து சொல்வது அவசரப்பட்டுப் பேசுவதாகவே இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான இந்த பிரச்னை, இரு தரப்பின் மனநிறைவோடு பேசித் தீர்க்கப்படும் என்று இப்போது எதிர்பார்க்கிறோம்” என்பதே அந்த நாட்டின் நிலை!

குடும்ப வன்முறையில் காயம்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் பரோமிதா ராய். அவரை அடித்த அந்தக் கணவனின் பெயர் அனில் வர்மா. லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தில் மூன்றாவது நிலையில் இருக்கும் அதிகாரி. அந்த அதிகாரி அவருடைய மனைவியை அடிப்பதற்கு அப்படி என்னதான் காரணம்? கிறிஸ்துமஸ் மரம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்ட மகனுக்கு அப்பா புதிதாக ஒன்று வாங்கிக் கொடுக்கலாம் என்றார். அம்மா ‘புதுசு தேவையில்லை. போன வருஷம் வாங்கியது இருக்கிறது. அதையே வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பக்கத்தில் வசிக்கும் அனில் வர்மாவின் சித்தி, பேரனுக்கு புதிதாக ஒரு கிறிஸ்துமஸ் மரம் வாங்கிக் கொடுத்து விட்டார். அதை பரோமிதாவும் வாங்கி வீட்டுக்குள் வைத்து விட்டார்!

அனில் வர்மாவுக்கு அவமானம் தாங்கவில்லை. மனைவி வாங்கி வைத்த கிறிஸ்துமஸ் மரத்தை வெளியில் தூக்கிப் போட அனில் வர்மா முயன்றார். அதை மனைவி தடுத்தார். கூச்சல், அடிதடி, அழுகை, காயம், ரத்தம், புகார், காவல்துறை, விசாரணை என்று அடுத்தடுத்துப் போய் இப்போது அவர் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டு இருக்கிறார்! ‘விடுபாட்டு உரிமையில் இருந்து வர்மாவுக்கு விலக்களியுங்கள்; அல்லது அவரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்துக் கொள்ளுங்கள். எங்கள் நாட்டில் தூதர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று பிரிட்டன் கறாராக நடந்து கொண்டதன் விளைவாக அனில் வர்மா இப்போது இந்தியா வருகிறார்!

மனைவியை தாக்குவது பிரிட்டனுக்கு பெரிய குற்றமாகத் தெரிகிறது. ஆனால், இந்திய வெளியுறவுத் துறைக்கு இது ஒரு பெரிய குற்றமாகத் தெரிவதில்லை. நாம் ‘பெருமையோடு’ கொண்டாடும் ‘இந்திய’ மரபு, மனைவியை கணவன் அடிப்பதையோ, குழந்தைகளை பெற்றோர் அடிப்பதையோ வன்முறையாக ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட ‘மனைவி தப்பு செய்தால் கணவன் அடிப்பான்தான்! இதுல என்ன தப்பு இருக்கு?’ என்று அடிவாங்கும் மனைவிகளே பேசுவதை நாம் காண முடிகிறது.

குடும்ப வன்முறை என்று சொன்னால் நம் கண் முன்னால் என்ன பிம்பம் வருகிறது? கூலி வேலை பார்க்கும் ஒருவர் ராத்திரி குடித்துவிட்டு வந்து மனைவியை குடிசையில் இருந்து வெளியில் இழுத்துப் போட்டு அடிக்கும் காட்சியே நம் கண் முன்னால் விரிகிறது. ஒரு நாட்டின் பிரதமருடைய வீட்டில் இருந்து திடீரென்று ஒரு நாள் இரவு ஒரு மருமகள் வெளியேற்றப்படும் பிம்பம் நம் மனதில் தோன்றுவதில்லை. இந்தியாவுக்குள் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் இருந்தாலும் சரி, இந்திய உயர் நடுத்தர வீடுகளிலும் பணக்கார வீடுகளிலும் கூட, ‘என்னுடைய வீட்டில் இருந்து வெளியே போ’ என்று நள்ளிரவில் ஒரு கணவன், தன்னுடைய மனைவியைத் தூக்கி எறியும் காட்சி நம் கற்பனையில் வருவதில்லை. ஆனால் அனில் வர்மாக்கள் நம்முடைய முகத்தில் ஓங்கி அறைகிறார்கள்! மிருகத்தனமான செயல்பாட்டுக்கு சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடுகள் இல்லை என்ற படிப்பினையைத் தருகிறார்கள். படிப்பு, பணம், பதவி போன்றவை எந்தவித நாகரிகமான பண்பாட்டையும் கற்றுக் கொடுப்பதில்லை என்று நமக்குப் புரிய வைக்கிறார்கள். தன்னைப் போலவே ரத்தமும் சதையும் உயிரும் உணர்வும் கொண்டவர்களாக மனைவி உள்ளிட்ட சக மனிதர்களை மதிப்பதற்கு நம்முடைய ‘மரபு’ சொல்லிக் கொடுப்பதில்லை என்பதை இவர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகிறார்கள்!

வெளிநாடுகளில் ‘இந்தியப் பெருமையை’ நிலைநாட்டும் பணி அனில் வர்மாவுடன் நின்றுவிடவில்லை என்பதை நீங்கள் சில நாட்களுக்கு முன் வந்த இன்னொரு செய்தி மூலம் அறிந்திருப்பீர்கள். அலோக் ரஞ்சன் ஜா என்ற அதிகாரி, நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் வம்பு செய்தார் என்று ஒரு புகார். அதன் அடிப்படையில் அவரும் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருக்கிறார். வல்லுறவு, கொலை போன்ற செயல்களைப் பெரிய குற்றங்களாக ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனநிலை, குடும்பங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களை மட்டும் தீவிரமான குற்றங்களாக ஏன் பார்ப்பதில்லை? அவற்றை நாம் தினசரி எதிர்கொள்ளும் ‘அன்றாட நிகழ்வுகளாக’ நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்வது எது? சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாக இருந்த போதிலும், கணவன் அடித்தால் மனைவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நம்மைக் கட்டிப் போடுவது எது? கண்ணுக்குத் தெரியும் விலங்குகளில் இருந்தே விடுபடுவதற்கு முயற்சி எடுக்காத நாம், நம்மைச் சுற்றிப் பின்னியிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய சங்கிலிகளை எப்போது அறுத்தெறியப் போகிறோம்?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

வளரும் தற்கொலைகள்!

சார்! எதிர்பார்த்ததை விட கடுமையான டிராபிக் சார்! அதுக்கு நடுவுல மாட்டிட்டு இருக்கேன் சார்! அரை மணி நேரத்துக்குள்ள வந்துடுவேன் சார்!” என்றார் அந்த ஊழியர். அவருக்கு என்று தனியாகப் பெயர் சொல்லத் தேவையில்லை. சென்னை போன்ற மாநகரங்களில் பல அலுவலகங்களில் காலை ஒன்பதரை மணி முதல் பத்தரை மணி வரை வரும் பல தொலைபேசி அழைப்புகளின் உள்ளடக்கம் இதுதான். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதே ‘சர்க்கஸ் வித்தை’ போல இருக்கிறது என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். மாநகரங்களின் எல்லா சாலைகளும் எதை நோக்கிப் போகின்றன என்பது தெரியாது. ஆனால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் என்பதை மட்டும் அறிய முடிகிறது.

இந்தப் போக்குவரத்து நெரிசலைப் பற்றிப் பேசும் போதெல்லாம், வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகமாகி இருப்பதையும் அவற்றை வாங்கும் சக்தி நடுத்தர மக்களிடம் அதிகரித்து இருப்பதையும் பேசிப் பேசி மாய்ந்து போகும் பல நண்பர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 1990-களுக்கு முன்னால், சாதாரணமாக ஒரு ஸ்கூட்டருக்கு பதிவு செய்து விட்டு மாதக்கணக்கில் காத்திருந்த காலத்தை சில மூத்த அதிகாரிகள் சொல்லும்போது இளைஞர்கள் ‘வாய் பிளந்து’ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் ‘வளர்ச்சியைப்’ பற்றி டாக்டர் மன்மோகன்சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏற்கனவே 2004-ம் ஆண்டு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியாவை ‘ஒளிரச்’ செய்த வரலாறும் அவர்களுடைய மனதில் தோன்றி மறையக் கூடும்.

இந்த ‘மயக்க’ நிலையோடு சில செய்திகளைப் பார்க்கும்போது அந்த செய்தியின் தீவிரம் நம்மைத் தாக்கி நம்முடைய மனசாட்சியை உலுக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா மண்டலத்தில் அவுரங்காபாத் நகர்ப் பகுதியில் கடந்த 2010 அக்டோபர் மாதத்தில் மட்டும் 150 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் 65 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டன என்று பத்திரிகையாளர் பி.சாயிநாத் ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறார். தொடர்ந்து ‘எரிதழல்’ போன்ற அரசியல் மற்றும் சமூக விமர்சனக் கட்டுரைகளை அல்லது பத்திகளை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு பி.சாய்நாத் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சென்னை லயோலா கல்லூரியில் படித்த அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் பேரன். ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் ‘ஊரகப் பிரிவு ஆசிரியராகப்’ பணியாற்றுகிறார். ரமன் மேக்சேசே விருது பெற்ற இந்தப் பத்திரிகையாளர் தன்னை ஒரு ‘செய்தியாளர்’ என்று மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறார். இந்தியாவின் கிராமப்புறங்களில் விவசாயம் எப்படி நடக்கிறது என்பதையும் விவசாயிகள் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விபரங்களையும் பிற பகுதி மக்களுக்கு அறியத் தந்தவர் சாயிநாத்!

150 பென்ஸ் கார்கள் வாங்கப்பட்ட செய்தியையும் 2009-ம் வருடம் இந்தியாவில் 17368 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தேசிய குற்றப் பதிவுக் குழுமத்தின் தகவலையும் இணைத்து ஒரு கட்டுரையை பி.சாயிநாத் எழுதி இருக்கிறார். சாமான்ய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நன்றாக செயல்படுத்துவதாக நம்பி, இந்திய மக்கள் அந்தக் கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு அமர்த்திய ஆண்டில் இத்தனை தற்கொலைகள்! 2008-இல் 16196 விவசாயிகள் தற்கொலை செய்தார்கள் என்கிறது தேசிய குற்றப் பதிவுக் குழுமம். டாக்டர் மன்மோகன்சிங், நரசிம்மராவ் தொடங்கி வைத்த பொருளாதார சீர்திருத்தங்களின் பலன்களை இந்திய மக்கள் அனுபவிக்கத் தொடங்கிய 1997 முதல் 2009 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 216500! இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை என்று சொல்வார்களே, அந்த மும்பையைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் கடந்த பத்து வருடங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் முதல் மாநிலமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களைத் ‘தற்கொலை வளைய மாநிலங்கள்’ என்று சொல்கிறார்கள்!

தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைக்கிறது; நிலமற்ற விவசாயிகளுக்கு ‘காணி நிலம்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கவலைகளை மறந்து பொழுதுபோக்குவதற்காக தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் பொதுவாக ஒருவருடைய மனதில் எழலாம். ஆனால் தேசிய குற்றப் பதிவுக் குழுமம் நம்முடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளி வீசுகிறது. 2008-ம் வருடம் தமிழ்நாட்டில், 512 ஆக இருந்த தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2009-ம் வருடம் 1060-ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 2005-ம் வருடத்தில் இருந்து 2009 –ம் வருடம் வரை தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3737 என்கிறது ஒரு செய்தி.

வருடம்

தேசிய குற்றப் பதிவுக் குழுமம்

அரசு தகவல்

2009

1060

0

2008

512

1

2007

484

1

2006

426

0

2005

1255

1

மொத்தம்

3737

3

ஆனால், இந்த எண்ணிக்கையை தமிழக அரசு முற்றிலுமாக மறுக்கிறது. அந்த செய்தியின்படி, இந்த ஐந்து வருடங்களில் 3 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் தமிழக சட்டப் பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாரிமுத்துவும், ம.தி.மு.க.வின் ஞானதாசும் இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முற்றிலுமாக மறுத்திருக்கிறார். தமிழக விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இந்த செய்தி தவறானது என்று சொல்லி இருக்கிறார். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் தமிழக காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து விவசாயத் துறை புள்ளி விபரங்களைக் கேட்டுப் பெறுவதாக அமைச்சர் சொல்கிறார். தேசிய குற்றப் பதிவுக் குழுமம் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் தகவல் திரட்டுவதாக சொல்கிறது. ஒரே காவல் நிலையத்தில் இருந்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு வெவ்வேறு விபரங்களைக் கொடுப்பார்களா என்பதை யார் உறுதி செய்வது? அந்த செய்தியில் 2005-ம் வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதை வைத்து திமுக ஆதாயம் தேடிக் கொள்ள முயலும் என்பது வேறு விஷயம்!

ஏராளமான சிறு விவசாயிகள் விதை வாங்குவதற்கும், உரம் வாங்குவதற்கும் வங்கிகள் அல்லாத இடங்களில் வாங்கிய கடன்கள் அரசாங்கம் தள்ளுபடி செய்த கடன்களில் அடங்காதவை. அதாவது ‘7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி’ என்ற அரசாங்கத்தின் அறிவிப்புக்கு வெளியே ஏராளமான விவசாயிகள் கடனில் மூழ்கி இருக்கிறார்கள். இந்தக் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளையும் அவை ’மானம் பெரிது’ என்று வாழும் விவசாயிகளுக்குத் தரும் மன உளைச்சலையும் எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். தமிழக அரசு சொல்வதைப் போல், ‘பட்டினிச் சாவு’ இல்லாமல் இருக்கலாம்; ஆனால் விவசாயத் தொழில் தரும் நெருக்கடியால் எழக் கூடிய பிரச்னைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற தரவை அரசு மறுக்க முடியாது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்